நீ உன்னையறிந்தால்…
“தன்னையறியத் தனக்கொரு கேடில்லை
தன்னையறியாமல் தானே கெடுகின்றான்
தன்னையறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்சிக்கத் தானிருந்தானே“
என்ற சித்தர் பாடலின் முத்தான வரிகளின் ஆழங்களில் விழுந்து ஆராய்ந்து பார்த்தால் தன்னையறியும் கலை என்பது மிகவும் அவசியமானது எனவும் அதுவே பிறப்பின் ரகசியம் என்பதும் அடுத்தது காட்டும் பளிங்குபோல மிகத் தெளிவாய் புலப்படுகிறது.
நாம் யாரிடமாவது விசாரித்தால் உதாரணத்திற்கு ஒரு முதியவரிடம் விசாரித்தால் இறைவன் நம்மைப் படைத்தன் நோக்கம் வணங்குவதற்கு என்கிறார்கள். வணங்குவது கடமைதான் அதில் மறுப்பதற்கில்லை. ஆனால் அவனை யார் என்று அறிந்து வணங்குவது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது. இறைவன் என்றால் யார்? அவன் ஏன் நம்மைப் படைத்தான்? எதனைக் கொண்டுப் படைத்தான்? நம் இலக்கு என்ன? நாம் எதை நோக்கிப் பயனிக்க வேண்டும்?
மேற்கண்ட வினாக்களுக்கு நாம் விடை காண வேண்டும்? நாம் இறைவனை வணங்குவதில் அவனை அறிந்து வணங்குவதே சாலச் சிறந்ததாகும். நாம் எவ்வாறு இறைவனை அறிவது? இது சாத்தியமா? என்று உங்கள் மனதில் ஐயம் எழுவது இயல்பே!. மேல்வாரியாக நமக்கு தெரிந்திருக்கும் இறைவன் நம்மைப் படைத்தவன், பரிபாலித்தவன், தேவையை நிறைவேற்றுபவன் ஆகியவை நாம் அறிந்தவொன்றே! ஆயினும் இறைவன் கொடுத்த அறிவைக் கொண்டு நுணுங்க ஆராய்தல் நம் ஆறாம் அறிவின் நோக்கமாகும்
நாம் இறைவனை அறிய வேண்டுமென்றால் முதலில் நம்மை அறிய வேண்டும்!. நம்மை அறிந்தால்தான் நம் நாயனான அல்லாஹ்வை அறிய முடியும். இதை அல்லாஹ்வின் தூதராய் வந்து நம்மை நெறிப்படுத்திய கலங்கரை விளக்கம், கண்ணியத்தின் உறைவிடம், மாசற்ற மாணிக்கமாம் நம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைவஸல்லம் அவர்கள் திருவுளம் ஆனது
“மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
“எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
இதில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்மை அறியத் தொடங்குவதற்கு முற்பட வேண்டும்
நம்மைப் அறிய வேண்டுமென்றால் நம்மை கத்தியாலோ அரிவாள்மனையாலோ அறிவது இல்லை. நம்மை முழுதாய் அனைத்து விடயங்களிலும் அறிதல் வேண்டும். உதாரணமாக உடலைப் பற்றியும், ஆன்மாவைப் பற்றியும்,அறிவைப் பற்றியும், பிறப்பைப் பற்றியும் அறிய முயற்சி எடுத்துக் கொண்டாலே எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு துணைபுரிந்து அவனை அவனே அவனாய் வெளிப்படுத்திக் காட்டுவான் என்பதில் ஐயமில்லை
இதெல்லாம் கட்டாயமில்லை. நாம் பிறந்ததற்கு அர்த்தம் இருக்கிறது நாம் ஒரு காரண காரியத்திற்க்காகவே இப்புவியில் பிறந்திருக்கிறோம் என்பதை யார் யார் உணர்கிறார்களோ அவர்கள் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். அதற்கு இறைவன் துணைபுரியட்டும் எனக் கூறி உங்கள் மேலான ஒத்துழைப்பிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
என்றும் தேடலுடன்,
ஓர் பச்சிளங்குழந்தை
பாவைப் பிரியன்.

