கவிதையைப் பிடிக்காத ஒருவரும் உளரோ? பொதுவாக அனைவருமே கவிதையை படித்து ரசிக்க்க் கூடியவர்களாக உள்ளோம். ஆனால் ஒரு சிலரே கவிதைகள் புனைவதில் ஆற்றல் படைத்தவர்களாக உள்ளோம். அதுபோன்ற ஆற்றல் படைத்தவர்கள் பலர் இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர் கவிதை உலகின் அரசன் அனைவராலும் கவிக்கோ என்று அன்பாக அழைக்கப்படுபவர், நம்மை பேனா முனையால் சிந்திக்கத்தூண்டும் சிற்பி மரியாதைக்குரிய கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களாவார்.
அவரின் மின்னல் கவித்திறத்திற்கு இதோ ஒரு சான்று
புத்தகங்களே சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்”
என்ற வரிகள் என்னை பிரமிக்க செய்தவைகளாகும்
அவரின் பித்தன் என்ற தொகுப்பை படித்தவுடன் இவருக்கு நிகர் இவரே என முடிவு செய்துவிட்டேன். அவை இதோ உங்கள் பார்வைக்காக
அறிமுகம்
என் ‘ஆலபனை’யின் பாடகன்
‘நேர்’களின் ரசிகன்.
பித்தன்
‘எதிர்’களின் உபாசகன்
எந்த நதியானாலும்
எதிர் நீச்சலே போடுபவன்
காரணம், அவன்
உண்மையின்
பின் பக்கத்தைப்
பார்த்திவிட்டவன்.
அதனால்
அறிவுச் சிறையிலிருந்து
விடுதலை அடைந்தவன்.
அவன்
இருளால்
ஒளி பெற்றவன்
மர்மங்களின் ரசிகன்.
அதனால்
‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற
முழக்கத்திற்கு எதிராக
‘ஒளியிலிருந்து இருளுக்கு’
என்று முழங்குபவன்.
உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.
அவன்
புறப்படுகிறவன் அல்ல;
திரும்புகிறவன்.
அவன்
‘இல்லை’யின் தூதுவன்.
‘இல்லை’ அவனது
மகா வாக்கியம்;
ஒற்றைச் சொல் வேதம்.
சீழ் நிரம்பிய
கொப்பளங்களை
முலை என்று சப்பும்
குழந்தைகளைப்
பரிகசிப்பவன்.
தீபங்களை
ஏற்ற அல்ல
அணைக்க வந்தவன்.
எழுப்ப அல்ல
உறங்கவைக்க
வந்தவன்.
அவன் தேனீ;
அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்.
எந்தக் கூண்டிலும்
அடைபடாதவன்.
உண்மைக்குப்
பலமுகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்.
அத்தனை முகங்களுக்கும்
முத்தம் தருபவன்.
முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
அவன்
போதிக்க வரவில்லை;
போதனைகளால்
நிராகரிக்கப்பட்ட
அனாதைக் குழந்தைகளை
எடுத்துக் கொஞ்ச
வந்திருக்கிறான்.
உங்கள் கல்லடிக்கு
அவன் காத்திருக்கிறான்.
ஏனெனில்
அதுதான் அவனுக்கு
அங்கீகாரம்.
*********
உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல்
என்கிறீர்கள்.
எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன்.
********
வினாவின் வெயிலுக்கு
உங்கள் விடைகள்
வெறும் குடைகளே என்பதை
அறிவீர்களா?
********
கூண்டுப் பறவை
கூண்டின் கூரையையே
வானம் என்று
வாதாடும்
ஓர் உரையை மட்டும்
ஏற்பவன்
உண்மையின்
பல பரிமாணங்களைக்
காணாமல் போய்விடுவான்
*********
எது பூவானதோ
அதுவே முள்ளானது
பூவைப் போலவே
முள்ளுக்கும்
இருத்தல் நியாயம்
உண்டு.
உங்களைக்
குத்துவதற்காக
முளைத்ததல்ல முள்.
நீங்கள்தான்
குத்திக்கொள்கிறீர்கள்.
*********
வெளியே புறப்படுதல் அல்ல
வெளியிலிருந்து
புறப்படுதல்தான்
பயணம்.
*********
மேலே என்பது
மேலே இருக்கிறது
என்பதுதான்
உங்கள்
பெரிய மூடநம்பிக்கை
*********
பசியை நீங்கள்
விலங்கு என்கிறீர்கள்
நானோ
பசியைச்
சிறகு என்கிறேன்.
அந்தச் சிறகு
இல்லையென்றால்
நீங்கள் இந்த
உயரங்களை
அடைந்திருக்க மாட்டீர்கள்
*********
ஒரு கூட்டலின்
மொத்தம் நீ.
உன் மதிப்பு
உன்னுடையதல்ல.
உன் சிந்தனைகள்
உன் சம்பாத்தியம் அல்ல;
அவை உன்னில் தூவப்பட்ட
விதைகளின் விளைச்சல்.
உன் கண்ணீர்
உன்னுடையதல்ல;
அது ஒரு
மகா சமுத்திரத்திலிருந்து
உன் வழியாகக்
கசியும் நீர்.
*********
மற்றொரு படைப்பான இருபக்கங்கள் என்ற தொகுப்பிலிருந்து சில வரிகள்
இரு பக்கங்கள்
காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்
தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்
விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்
கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்
புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்.
- அப்துல் ரகுமான் (தொகுப்பு – சுட்டுவிரல்)
அவரைப் புகழ எனக்குத் தகுதியில்லை…
கவிதைகள் பாட நான் கவிக்கோ இல்லை…
என்றும் வாசகனாய்
பாவைப் பிரியன்.
========================================================================
========================================================================
தூங்காதே!
இளைஞனே துடித்தெழு!
வரம்பற்ற வெறியாட்டத்தைக் கண்டும்
நரம்புகள் தளர்ந்து கிடக்க நீ என்ன
இரும்பு மரமா?
இன்னும் என்ன தயக்கம்?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தையும் காட்டு! என்றார்
ஈஸா! (அலை)
ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவரின்
இரு கன்னத்திலும் அடி! என்றார்
முஸா (அலை)
ஆனால் முகம்மது நபியோ(ஸல்)
ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவரின்
ஒரு கன்னத்தில் நீயும் அடி! என்றார்கள்!
மனிதம் மறக்கப்படும் வேளையிலும்
புனிதம் என்ற பெயரில் மதவெறி தலையெடுக்கும் போதும்
இனிதே இறைவனின் ஆணையேற்று கையில் வாளை
ஏந்திட ஒருபோதும் தயங்காதே! நீ
இந்தியன் என்பதை மறக்காதே!
நபிவழி நடக்க மறந்ததினால்
நாளும் துயரங்கள் அடைந்துவந்தாய்!
வெயிலைத் தாங்கிட தலைப்பாகை ரசூல்
வழக்கமாகவே அணிந்து வந்தார்!
தலைக்கணம் பிடித்த கும்பல் ஒன்று
தலையை மறைக்க மறுத்து திரிகிறது!
துற்பாக்கியசாலிகளைப் போல நீயும்
தற்காப்புக்கலைகள் அறியலையோ?
விஷமிகளிடமிருந்துக் காத்துக்கொள்ள ரசூல்
வாள் பயிற்ச்சிகளை கற்கலையோ?
கோள் சொல்லும் வேளையிலே உன்
வாழ்நாள் முழுதும் வீணடித்தாய்!
மார்க்கக் கல்வியை மறந்துவிட்டாய்! வீண்
தர்க்கத்தில் பொழுதை கழித்துவிட்டாய்!
தீர்க்கமான சுன்னத்தினை அதுசுத்தப் பொய்யென
சொல்ல துணிந்துவிட்டாய்!
மத்ஹபுகள் நான்கை துறந்துவிட்டாய்! கெட்ட
மேதாவிகள் கும்பலில் சேர்ந்துவிட்டாய்!
இனியேனும் சிந்தித்துப்பார்! சுத்த சுன்னத்து ஜமாத்தை
பின்பற்றினால் இறைநேசத்தை பெறுவதில் ஐயமில்லை!
— இங்கனம் சி. அபுல் கலாம் ஆசாத் சுபுரி.
பாபநாசம். 614 205.
==========================================================================
==========================================================================
3.மானுட விடியல்
தாயின் வயிற்றில் இருந்த
சேயும் துண்டிக்கப் பட்டது!
மதவெறித் தீப்பிழம்பில் மானுடம்
கருகிய போது……
புவியினை காணவில்லை!
ஆனால் நீயோ மரணத்தை கண்டுகொண்டாய்!
மதவெறி தலைக்கேறி
இனவெறி போதையில் மானுடபாதை மாறி
இரத்தம் குடிக்;கும் மிருகங்களின்
அகோரப் பசிக்கு நீயுமா ஆளாகிவிட்டாய்?
நல்ல வேளை!
தாயின் முன்னே மகளின் கற்பையும்
மகளின் முன்னே தாயின் கற்பையும் பதம் பார்த்;த
பேடியர்களின் முகம் காணாது சென்றுவிட்டாய்!
கடவுள் மனிதனை நிர்வாணமாகத்தான் படைத்தான்…
மனிதனோ மதம் எனும் போர்வைக்குள்
மறைந்து கொள்ளப் பார்க்கிறான்!
சத்தியமாக கடவுளுக்கும் மதவெறிக்கும்
கடுகளவும் தொடர்பு இல்லை!
ஒருதாய் மக்கள் நாம் என்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்! என்ற மந்திரத்தை பின்பற்றினால்
நமக்குள் பிரிவினை முளைத்தெழுமா?
மனிதனை மனிதனை பார்ப்போம்…
மானுடத்தின் மகத்துவம் காப்போம்!
-கண்ணீர் பிரியன்.
அபுல் கலாம் ஆசாத்
பாபநாசம் 614 205
=====================================================================
=====================================================================
4. புதியதோர் உலகம் செய்வோம்
வன்முறையின் வாசமில்லா
நன்னெறியின் நீரூற்றி
சத்தியத்தின் மண்ணெடுத்து
அசத்தியத்தை தரம்பிரித்து
சகோதரத்துவம் எனும் சாயமிட்டு
புதியதோர் உலகம் செய்வோம்…
காவியையும் காக்கியையும்
கற்ப்பழிப்பு சீருடையாக்கிய சில
கயவர்களின் தோலுரிப்போம்…
மனிதம் மீறுபவர்களுக்கு
மரணத்தை பரிசளிப்போம்…
கடமை தவறுபவர்களுக்கு
கண்ணீரால் புரியவைப்போம்…
அன்பை விதைப்பதையே
ஆயுள்வரை கடைப்பிடிப்போம்…
‘வறுமை’ எனும் உயிர்கொல்லி
வருமுன்னே துரத்திடுவோம்…
துன்பம் என்று வருபவர்களுக்கு
இன்பமுடன் தோள் கொடுப்போம்…
இல்லையென்று சொல்லுவதை
இல்லாமல் ஆக்கிடுவோம்…
தொல்லை கொடுமைகளை
தூர்வாரி மாற்றிடுவோம்…
கல்லாமை பாவமென
கடும் சட்டங்கள் இயற்றிடுவோம்…
எல்லார்க்கும் எல்லாமும்
கிடைக்க வழி செய்திடுவோம்…
நல்லோரை நாம்போற்றி
நெஞ்சார வாழ்த்திடுவோம்…
கர்வம் கொண்டோரை அன்பாலே
கூண்டோடு மாற்றிடுவோம்…
மண்ணுயிரை தன்னுயிர்போல்
நாளும் மதித்து ஒழுகிடுவோம்…
இறைபாதத்தை அடைவதையே
இலக்காகக் கொண்டிடுவோம்…
இறைநேசச் செல்வர்களை
இரு கண்ணாக்ப் போற்றிடுவோம்…
நட்புடன்,
பாவைப் பிரியன்.
====================================================================
as====================================================================
5பாசிச விசம்!
தூங்கியே சுகம் கண்ட தோழா
தாங்கிப் பிடிக்க கரங்கள் உண்டு வாடா
ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு நல்ல
ஏணியாய் வாழ்ந்து விட்டு போடா
எழுந்து நடக்க தெரிந்து கொண்டால்
விழுந்து பழகுவதில் தவறில்லை
சாதிக்காக போராடுவதை மறந்து
சாதிக்கப் போராடத் துவங்கினால்
நீதிக்காகப் போராடத் தேவையிருக்காது
நீரெல்லாம் ரணமாக மாறும் வேளையிருக்காது
விட்டில் பச்சிகளைப் போல நீயும்
விளக்கினை கண்டு மடிந்தால்
வீட்டில் விண்மீண் எறிவது எப்போது
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா
தாடி வைத்தவனெல்லாம் தீவிரவாதியா
குடி கெடுக்கும் பாசிசத் தத்துவத்தின்
குறிக்கோளே குதர்க்கம்தானடா
மகாத்மாவையே கொல்லத் துணிந்தவர்கள்
உனக்கு மட்டும் என்ன கொடி பிடிப்பார்களா
நீ தொட்ட காரியமெல்லாம் துலங்கியதால்
‘துலுக்கன்’ என்றழைக்கப் பட்டாய்
வந்தவரனைவரையும் பாய் விரித்து உபசரித்ததால்
பாசமாக ‘பாய்’ என்றழைக்கப் பட்டாய்
இன்றோ! நீயொரு தீவிரவாதி என்று
இல்லாத தீராதவியாதி பரவி வருகிறது
கோட்சேவின் அஸ்தியை வணங்குபவர்கள்
உன் அஸ்திவாரத்தையே அழிக்கத் துடிக்கின்றனர்
சதாமைக் கொன்ற கும்பல் ஒருபுறம்! இஸ்லாமிய
சகாக்களை வேரரறுக்கும் கும்பல் மறுபுறம்
குண்டுமழை பெய்தாலும், குண்டர்கள் தாக்கினாலும்
உண்டுனக்கு வாழ்வு இதயத்தில் ஈமான் உள்ளவரை
——–உன்னவன் சி. அபுல் கலாம் ஆசாத்
===========================================================================
=============================================================================
படைப்பின் நோக்கம்
எல்லாப் புகழும் வல்ல இறைவன் அல்லாஹுத்த ஆலா ஒருவனுக்கே. அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று இருலோக இரட்சகர் நம் பெருமானார் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து கூறியவனாக் இந்தக் கட்டுரையைத் துவக்குகிறேன். அல்லாஹுத்த ஆலா ஜின்னையும் மனிதனையும் தன்னை வணங்குவதற்க்காகவேறன்றிப் படைக்கவில்லை என்று திருமறையில் கூறுகின்றான். இதன் விளக்கமாவது…
எது வணக்கம்:
“எம்மை வணங்குவதற்கன்றி நாம் அவர்களைப் படைக்கவில்லை” என்கிறான். ஆகவே நாம் அவனை வணங்குவதற்க்கு மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது உறுதியாகிறது. அப்படியென்றால் நாம் சதா காலமும் இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே முதலில் வணக்கம் என்ற பதத்தை கவனிக்க வேண்டும். வணங்குதல் என்றால் நினைவுகூறுதல் என்று பொருள்படும். தொழுகையும் இதில் அடங்கும்
ஆக இறைவனின் ஆணை அவனை அனுதினமும் நினைப்பதாகும்.
மனிதர்களுக்கு இது சாத்தியமா
எந்த கணமும் அல்லாஹ்வை சிந்தையில் செலுத்தி ஞாபகப் படுத்துவது நம்மால் சாத்தியமானதுதான். இருந்த போதிலும் அதற்கு நம்முடைய கடின முயற்சிகளும் அதற்கான வழிமுறைகளும் தேவைப் படுகின்றன. வழியொன்று இருந்தால்தானே நம் இலக்கை அடைய முடியும்.
எப்படி இலக்காகிய அல்லாஹ்வின் சிந்தனையை ஞாபகத்தை அடைய முயல்வது?
சதாகாலமும் அல்லாஹ்வை ஞாபகம் செய்வதற்கு சூஃபியாக்கள் எனும் இறைநேசர்கள் சில வழிமுறைகளைக் கற்றுத் தருகிறார்கள். அதாவது,
முதலில் அல்லாஹ்வின் “உம்முசிபாத்” என்று கூறப்படும் கல்யாண குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் கல்யாண குணங்களாவன:
ஹயாத் -உயிர்
இல்ம் -அறிவு
இராதா -நாட்டம்
குத்ரத் -சக்தி
ஷமாஅத் -கேள்வி
பஷாரத் -பார்வை
கலாம் -பேச்சு
ஆகிய ஏழு குணங்களும் அல்லாஹ்விற்கு மட்டுமே முழுவதும் சொந்தமானவையாகும்.
நினைவு கூறல்:
1. நாம் ஹயாத்தாக இருக்கிறோம் என்ற நினைவு வரும் போதெல்லாம் “நாம் மவுத்தானவர்கள்” அல்லாஹ்வே ஹயாத்தானவன். அவனுடைய ஹயாத்தைக் கொண்டே குறிப்பிட்ட தவணைக் காலம் வரை மவ்த்துடைய சொருபமாகிய நம்மை ஹயாத்தாகக் காட்டிக் கொண்டிருகிறான் என்று நினைவு கூறல் வேண்டும்.
2. இரண்டாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது இல்ம். நம்முடைய அடிப்படை குணமே முட்டாள் தனம்தான். அறிவுக்கு சொந்தக் காரன் அல்லாஹ் ஒருவனே!. அவனே ஆலிமாக இருக்கிறான். நாம் அனைவரும் ஜாஹிலாக இருக்கிறோம். ஆலிமாகிய அல்லாஹ் ஜாஹிலாகிய நம்மை ஆலிமாகக் காட்டிக் கொண்டிருக்கிறான். நாம் எந்தவிதமானப் பட்டப் படிப்புகள் படித்த போதிலும் நம்மையே உயந்தவர்களாகக் கருதி விடாமல் அல்லாஹ்வை நினைவு கூறுவதே சாலச் சிறந்ததாகும்.
3. மூன்றாவதாக நாட்டத்திற்கு சொந்தக்காரன் அல்லாஹ்வாக இருக்கிறான். அவன் ஒருவனே அனைத்தையும் நாடுவதற்கும், நாடியதை நடத்தி முடிப்பதற்கும் ஆற்றல் பெற்றவனாவான். இதன்மூலம் எந்த ஒரு நாட்டத்தையும் நாடுவதற்கு முன் இத்ற்கு பொருத்தமானவன் அவனே என்று நினைவுகூறல் வேண்டும்.
4. நான்காவதாக சர்வசக்தியும் அல்லாஹ்விற்கே உரியது என்பதை நினைவு கூறுவதாகும். நாம் அசலில் எந்தவிதமான சக்திக்கும் அருகதையற்றவர்களாகவே உள்ளோம் என்பதை உணர்வதாகும். உதாரணமாக எந்த ஒரு காரியத்தை செய்யும் போதும் இதை செய்வதற்குரிய சக்தி இறைவனாகிய அல்லாஹ்விற்கே சொந்தம் என்பதை நினைவு கூறுதல் அவசியமாகும். நாம் உணவு உண்ணும் போது நம் கைகளால் அள்ளிய உணவை நம் வாயின் அருகில் சேர்த்தது யாருமில்லை “இல்லல்லாஹ்” என்று கூறல் வேண்டும். நடக்கும் போதும், அமரும் போதும், ஓடும் போதும், உறங்கும் போதும் அவன் சக்தியைக் கொண்டே செயல்படுகிறோம் என்பதை நினைவுகொள்ளல் வேண்டும். கழிப்பறையிலே சுத்தம் செய்யும் பொழுது கூட நாம் அல்லாஹ்வை மறந்துவிடக் கூடாது.
5. ஐந்தாவதாக கேள்வி என்னும் ஸமாத்திற்கு உரியவன் அல்லாஹ் என்று ஞாபகம் செய்தல் வேண்டும். ஏனென்றால் நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் காது தான் கேட்க்கிறது என்று. எத்தனையோ நபர்களுக்கு காதுகள் இருந்தும் கேட்கும் திறன் இன்றி இருப்பதை நம்மால் இன்று காண முடிகிறது. ஆகவே காது என்பது கேட்-காது அது ஒரு வாசல் மட்டுமே என்று நாம் விளங்கிக் கொள்கிறோம். ஆக கேட்கும் தன்மைக்கு எஜமானான அல்லாஹ்விடம் நம் சிந்தனையை அர்ப்பணிக்க வேண்டியதுத் தெளிவாகிறது.
6. ஆறாவதாக பஷீர் என்ற பார்க்கும் தன்மைக்கு உரியவன் எல்லாம் வல்ல அல்லாஹ் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கண்ணிருக்கும் அனைவரும் காண்பதில்லையாதலால் கண் என்பது பார்க்க முடியாது. அது பார்வைக்கு ஒரு பாலமாக மட்டுமே திகழ்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த சிந்தனையை நாம் எந்த ஒரு காட்சியைக் காணும் போதும் நினைவுக்கு கொண்டு வருதல் வேண்டும். அவ்வாறு கொண்டு வருவதால் அவனுடய தொடர்பும் நன்றியறிதலும் கிடப்பதோடு மட்டுமில்லாமல் தேவையில்லாதக் காட்சிகளைக் காணுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள முடியும்.
ஏழாவதாக “கலாம்” ஆகிய இந்தப் பேச்சுக்கு ஃபாத்திரவான் அல்லாஹ்வே என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
வாயின் வழியாக வெளிப்படும் அத்தனைப் பேச்சுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் என்பதை அறிந்தோமென்றால் தேவையற்ற பேச்சுக்களிலிருந்தும், பொய், கோள்,புறம் ஆகியவற்றைப் பேசுவதில் இருந்தும் நீங்கிக் கொள்வோம். அவன் துதியினைப் பாடுவதற்கு பழகிக்கொள்வோம்.
முடிபு:
இந்த அல்லாஹ்வின் உம்மு சிபாத்துக்களை அவனுக்கே சொந்தம் என்பதை விளங்கி சதா காலமும் அவனுடைய சிந்தனையிலே நம் நினைவுகளைக் கழிப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிய வேண்டியவனாக, இதுவரை பொறுமையுடன் படித்த அனைத்து உள்ளங்களும் அதன் படி நடக்க வேண்டுகிறேன்.






